அறிவியல்

அணு உலைகள் – அறிவியலும் ஆபத்துகளும் !

அணுகுண்டு தயாரிப்பும், அணுமின் உற்பத்திக்காக வெப்பத்தை உற்பத்தி செய்யும் அணு உலையும் அடிப்படையில் ஒரே தத்துவத்தைக் கொண்டது.  அணுகுண்டு என்பது கட்டுப்பாடற்ற ஒரு முழு வீச்சான செயல்முறை.ஆனால் அணு உலையில் இந்தக் கட்டுப்பாடற்ற இயக்கத்தைக் கட்டுப்படுத்தவே தணிப்பான்கள் (Moderators) பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தணிப்பான்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒவ்வோர் அணு உலையும், ஒவ்வோர் அணு குண்டுக்கு ஒப்பானதுதான் என்று சொல்லலாம்.

Water Electricity Reactor :

யுரேனியம் 235ஐ எரிபொருளாகக் கொண்டு செயல்படும் அணு உலை 440 மெகாவாட் திறன் கொண்டதும், 1000 மெகாவாட் திறன் கொண்டதுமான இரண்டு வகைப்பட்டதாக வடிவமைக்கப்படுகிறது.

இதில் கன நீரை தணிப்பானாகப் பயன்படுத்துவது Water Electricity Reactor – WER எனப்படுகிறது.

இத்துடன் நீரைக் குளிர்விப்பியாகவும் தணிப்பானாகவும் கொண்ட Water Cooled Water Moderated Energy Reactor என்னும் ஒரு வகையும் செயல்படுத்தப் படுகிறது.

இதுவே, WWER எனவும், VVER எனவும் அழைக்கப் படுகிறது. மற்றொன்று, கிராஃபைட்-ஐத் தணிப்பானாகப் பயன்படுத்துவது. இது RBMK என அழைக்கப் படுகிறது.

இந்த அணு உலை ரஷ்யத் தொழில் நுட்ப அடிப்படையில் செயல்படுவதாகும்.எனவே ஆங்கிலத்தில் High Power Channel Type Reactor என அழைக்கப்படும் இது ரஷ்ய மொழியில் Reaktor Bolshoy Moschnosti Knalniy-RBMK என அழைக்கப்படுகிறது.

செர்னோபில் விபத்துக்குள்ளானது இவ்வகை அணு உலையே. அதனால் அதனின்றும் பாதுகாப்பாக வடிவமைக்கப் பட்டதே (VVER) அணு உலை எனவும் சொல்லப்படுகிறது.

Fast Breeder Reactor :

யுரேனியம் 235ஐ எரிபொருளாகப் பயன்படுத்தும், முதல்வகை அணு உலைகளில் ஏற்படும் கழிவான புளூடோனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவது இரண்டாவது வகைப்பட்ட உலையாகும்.

இது முதல் வகைப்பட்ட அணு உலையை விடவும் அதிக அளவு ஆற்றலையும் வெப்பத்தையும் தர வல்லது. இதை அதிவேக ஈனுலைகள் (Fast Breeder Reactor -சுருக்கமாக FBR) என்கிறார்கள்.

இரண்டாவது வகை FBR உலைகளில் வெளிப்படும் கழிவுகளான, எரிபொருளாகப் பயன்படாது போன, ப்ளூட்டோனியம் மற்றும் தோரியத்திலிருந்து பெறப்படும் யுரேனியம் – 233.

இவற்றில் தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலை இந்த மூன்றாவது வகைப்பட்டதாகும்.

முதலாவதாக, அணுக் கருப்பிளவு என்பது அளவு கடந்த, அபரிமிதமான வெப்ப ஆற்றலை மட்டும் தரவில்லை. மாறாக, அது அபாயகரமான அழிக்க முடியாத கதிரியக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

இக்கதிரியக்கம் என்பது அத்தனிமத்தின் இயற்கைப் பண்பு. அதாவது, பழுத்த பழம் மணம் வீசுவதைப் போல, ஒரு குறிப்பிட்ட அணுப் பொருண்மை கொண்ட தனிமங்களெல்லாம் இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

இயற்கையில் மிக மெதுவான, சீரான, பரவலான அளவில் உள்ள இக்கதிரியக்கம் அணுக்கருப் பிளவின் போது அபரிமிதமாக ஒரே நேரத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. எனவே இது கட்டுப்பாடற்றதாக, தடுத்து நிறுத்த முடியாததாக இருக்கிறது.

இரண்டாவதாக, இக்கதிரியக்கத்தை அழிக்க முடியாது என்று சொல்வதன் காரணம், அது ஆற்றலின் அழியாமை விதி போல, ஓர் ஆற்றல் இன்னோர் ஆற்றலாக உடனடியாக மாற்றப்படுவது போல, இக்கதிரியக்க ஆற்றலை உடனடியாக வேறு ஓர் ஆற்றலாக மாற்றிவிட முடியாது என்பதுதான்.

கதிரியக்கம் பரவிய சுற்றுச் சூழலில் இக்கதிரியக்கம் சுற்றிலுமுள்ள உயிரினங்களை, மனிதர்களை, விலங்குகளை, தாவரங்களைப் பாதிக்கும். காற்றைப் பாதிக்கும்.

இதிலிருந்து ஒளிந்து கொள்வது அல்லது தப்பித்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம், இது கனமான கான்க்ரீட் கட்டடங்களையும் தாண்டி ஊடுருவ வல்லது.

இப்படிப் பரவிய கதிரியக்கமானது ஏதோ சில மணிநேரம் அல்லது ஒரு நாள் இரண்டு நாள் கிடந்து பிறகு மறைந்துபோய் விடாது.

மண்ணில் பரவிய கதிரியக்கம் அதில் முளைக்கும் புல்லில், அந்தப் புல்லைத் தின்னும் மாட்டில், அது கறக்கும் பாலில், இப்படித் தாவித்தாவி மாறிக்கொண்டே உயிருடன் இருக்கும்.

இப்படிப்பட்ட அபாயங்களோடு செயல்படும் அணு உலை, அது செயல்படுவதால் வெளிப்படுத்தும் கழிவுப் பொருள்கள் பற்றிய அபாயம் ஒருபுறம். உதாரணமாக, யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலை புளூட்டோனியத்தைக் கழிவாகத் தருகிறது.

இதுவும் கடுமையான கதிரியக்கத் தன்மை உடையது. எனவே கதிரியக்கத்தால் ஏற்படும் எல்லாவித ஆபத்துகளையும் இதுவும் தோற்றுவிக்கிறது.

எனவே இந்தக் கழிவை என்ன செய்வது என்று தெரியாமல் பல நாடுகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

Decommissioning :

இதை உலோகப் பெட்டிகளிலும், பீப்பாய்களிலும் அடைத்து பூமிக்கு அடியில் ஆழக் குழி தோண்டிப் புதைக்கின்றனர். அல்லது இதை ஆழ் கடலுக்குள் தள்ளுகின்றனர்.

இப்படி இந்தக் கழிவை அப்புறப்படுத்துவதை அல்லது பாதிப்பற்றதாக அதாவது வீரியத்தைச் செயலிழக்கச் செய்வதான முயற்சியை Decommissioning என்கிறார்கள்.

எனவே அணு உலை என்பது அதன் உருவாக்கத்தோடு கூடவே அதைச் ‘செயலிழக்கச் செய்தல்’ என்பதும் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

 

Related posts