குறும்புத் தனம் செய்யும் சிறுவர்களை, ‘வால் முளைத்த குழந்தைகள்’ என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்வதை கேட்டிருப்பீர்களே! ஆனால், உண்மையிலேயே வால் முளைத்த விண்மீன்களும் உள்ளன தெரியுமா?
ஏசு பிறந்தபோது இதுபோன்ற ஒரு விண்மீன் வானத்தில் தெரிந்ததாக கதைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். இவைகளை ‘கோமெட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இந்த வகை விண்மீன்கள் வானத்தில் தெரியும் போது உலக மக்களுக்கு பேராபத்துகளோ, மகிழ்ச்சியோ ஏற்படும் என்றும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. இது உண்மை அல்ல.
ஹாலி என்ற வால் விண்மீன் கி.மு.240 முதல் கி.பி. 1910 வரை 28 முறை தோன்றியுள்ளது. வால் விண்மீன்களுக்கு தலைப்பகுதி ஒளிவட்டம் கொண்டிருக்கும். இது 30,000 முதல் 10,00,000 மைல்கள் வரை அளவு இருக்கும்.
வால் பகுதியோ 50 லட்சம் மைல்கள் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த வால் விண்மீன்கள் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இந்த சுற்றுதலில் சுமார் 40,000 கோடி மைல்களுக்கு அப்பால் சென்று வருகின்றன. அதனால் தான் எப்போதாவது ஒரு முறை தோன்றுகின்றன.
எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை இவை தோன்றும் என்பதை வைத்து, இவைகளை அறிவியல் அறிஞர்கள் வகை பிரிக்கிறார்கள்.
‘எங்கி’ என்ற வால் விண்மீன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும். ஹாலி வால் விண்மீன் 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும். இப்படி 100, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் விண்மீன்களும் கூட உண்டு!
1864ஆம் ஆண்டு தெரிந்த ஒரு வால் விண்மீன் 20 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் இனி தோன்றும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
நம் நாட்டைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரின் பெயர் ஒரு வால் விண்மீனுக்கு வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?
அவர் பெயர் எம்.கே.வி. பாப்பு. இவர் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வு நடத்தியபோது ஒரு வால் விண்மீனை கண்டுபிடித்தார். அதனால் அவ்வால் விண்மீனுக்கு The Bappu Box Kint Comet என்று பெயர் வைக்கப்பட்டது.
நீங்கள் இப்படி ஒரு வால் விண்மீனை கண்டுபிடித்தால், உங்கள் பெயரும் அவ்விண்மீனுக்கு வைக்கப்படலாம்!
இவரின் முயற்சியால் தான் நமது மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில், காவலூர் தொலைநோக்கி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வானவியல் தொலைநோக்கி ஆய்வு நிலையம் இதுதான்.