லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ்
2017ம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். பெரியளவில் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் திரைக்கு வந்த மாநகரம் திரைப்படம் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு 2019 ஆண்டு வெளியான கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தார் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் படம்
இதனையடுத்து கடந்த லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படமும் வசூலில் சக்கைபோடு போட்டது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்தது கமலை வைத்து இயக்க போகிறார் என்ற செய்தி வெளியானது. இந்த செய்தி வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழ தொடங்கி விட்டது. இதனிடையே விக்ரம் என்ற பெயருடன் டைட்டில் டீசர் ஒன்றை வெளியிட்டது படக்குழு.
டைட்டில் டீசர்
அதில் துப்பாக்கிகளை ஒளித்து வைத்து, அனைவருக்கும் விருந்து படைத்து ‘ஆரம்பிக்கலாங்களா’ என்று கமல் பேசும் வசனம் ரசிகர்களை அலற வைத்தது. அதன்பிறகு படத்தின் ‘பத்தல பத்தல’ என்ற சிங்களை வெளியிட்டது படக்குழு. அந்த பாடலில் இடம் பெற்றிருந்த ஒன்றியம் போன்ற வரிகள் கமலின் அரசியல் விமர்சனமாக கருதப்பட்டது.
முன்பதிவு தொடங்கியது
பின்னர் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மேலும் பரபரப்பு ஆக்கியது. இதனைதொடர்ந்து படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இப்படி ரசிகர்களை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருந்தது படக்குழு. இந்நிலையில், படம் ஜூன் 3ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கான முன்பதிவும் நேற்று தொடங்கப்பட்டது.
வியாபாரம்
இந்நிலையில், திரைக்கு வருவதற்கு முன்பே சுமார் 200 கோடி ரூபாய் வரை ‘விக்ரம்’ படம் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவற்றை சேர்த்து 200 கோடி வரை வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.