வணிகம்

காகிதம் உருவான வரலாறும் அதன் வணிக வளர்ச்சியும்

முதன் முதலாக காகிதம் போன்ற தோற்றத்தை ஒத்த பொருட்களை எழுதப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். அவர்கள்தான் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் பாப்பிரஸ் (Cyperus Papyrus) என்னும் தாவரத்தின் தண்டுப் பகுதியை எழுதும் காகிதமாக பயன்படுத்தினர்.

 

பாப்பிரஸ் என்னும் அத்தாவரத்தின் பெயராலேயே இன்றளவும் காகிதமானது பேப்பர் என்றழைக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப் படுகிறது. ஆனாலும் அசலான காகிதத்தைக் கண்டுபிடித்தப் பெருமை கி.பி. 105 இல் வாழ்ந்த சீன தேசத்து விஞ்ஞானி கைய் லூன் (Cai Lun) என்பவரையே சாரும். அவர்தான் மரநார்கள், தாவர இலைகள், மீன்பிடி வலைகள், துணிக் கழிவுகள் கொண்டு காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தவர்.

அத்துடன் ஒருநாள் குளவி (Wasp) யொன்று மரத்தைத் துளைத்து அதிலிருந்து பெறும் மரத்துகள்களைக் கொண்டு தனது வலிமையானக் கூட்டைக் கட்டிக்கொள்வதை கூர்ந்து கவனித்தாராம் கைய் லூன்.

அக்குளவியின் திட்டத்திலிருந்து தூண்டுதல் பெற்ற அவர் மரத்துகளைக் கூழாக்கி தான் விரும்பும் வடிவத்தில் காகிதத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து நவீன சமுதாயத்துக்கு கையளித்துவிட்டு சென்றார்.

சீனர்கள் காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத் திறனை வெளியுலகுக்குக் காட்டாமல் பல நூறு ஆண்டுகாலம் இரகசியமாக பாதுகாத்து வந்தனர். கி.பி. 751 இல் அரேபியர்கள் சீனா மீது போர்த்தொடுத்து வென்ற பின்புதான் அந்த குட்டு உடைந்து இரகசியம் வெளிப்பட்டுள்ளது.

தாலஸ் போர் எனப்படும் அப்போரில் சீனாவை வென்ற அரேபியா, காகித தயாரிப்பு தொழில் நுட்பம் அறிந்த இரண்டு கைவினைஞர் களை போர்க்கைதிகளாக தம் நாட்டுக்குக் கொண்டு சென்றது.

அவ்விரு கைதிகள் மூலம் காகித தயாரிப்பு தொழில் நுட்பம் அரேபியாவில் காலூன்றிய பின்பு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் என்னும் நகரில் உலகத்தின் முதல் காகித தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டது.

அங்கிருந்து ஈரான், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் காகித தயாரிப்பு தொழில் நுட்பம் பரவியது.

18 ஆம் நூற்றாண்டு வரைக்கும் கால்நடையின் சாண நிறத்தில் தான் காகிதம் இருந்து வந்துள்ளது. 1844 ஆண்டு சார்லஸ் ஃபெனர்ட்டி (Charles Fenerty) மற்றும் ஃபிரெட்ரிக் கெல்லர் (Friedrich Gottlob Keller) என்னும் இரு விஞ்ஞானிகள் இணைந்து இன்று நாம் பயன்படுத்தும் வெள்ளைக் காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தனர்.

Related posts