மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில், காடகநல்லி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் புட்டுசாமி. இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயரிட்டுள்ளார். இந்த தோட்டத்தை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்ற அவர் தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்திருக்கின்றார்.
இந்த நிலையில், சமீபத்தில் மக்காச்சோளத்தை உண்ண வந்த 30 வயதுமிக்க ஆண் யானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. மார்ச் 5ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக, கடம்பூர் வனத்துறையினர் விவசாயி புட்டுசாமி-யிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சட்டவிரோதமாக மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடி புட்டுசாமி மின்வேலி அமைத்தது தெரிய வந்தது.
இதைத்தாண்ட முயற்சித்தபோதே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை இறந்துள்ளது. யானையின் உடலைக் கைப்பற்றிய கடம்பூர் வனத்துறையினர் அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், யானை உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மின்வயர், வேலிகம்பி, மரத்துண்டுகள் ஆகியவற்றை புட்டுசாமியிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கோவை சிறையில் புட்டுசாமி அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையில் உள்ள புட்டுசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கெளதம் பரிந்துரையின் பேரில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ் கந்தசாமி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
யானை இறந்த வழக்கில் விவசாயி மீது குண்டர் சட்டம் போடப்படுவது இதுவே முதல்முறையாகும். பொதுவாக, சமூக விரோதிகள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது மீண்டும் இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படுகின்றது. இதன் கீழ் கைது செய்யப்படுவர் ஓராண்டுக்கு பிணையில் வெளியே வர முடியாது.
விவசாயி மீதான குண்டர் தடுப்புச் சட்டம் வழக்கைத் தொடர்ந்து, அக்கிராம மக்கள் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஏற்கனவே யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் அகழிகளை அமைத்திருக்கின்றனர்.
ஆனால், அவை போதிய ஆழம், அகலம் இல்லாததால் யானைகள் சுலபமாக அகழிகளை தாண்டி கிராமத்துக்குள் புகுந்து விவசாய நிலத்தை அழிக்கின்றன. எனவே, யானைகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்கு வனத்துறையினர் வனப்பகுதியில் போதிய தண்ணீர் மற்றும் தீவனங்களை ஏற்பாடு செய்தும், பெரிய அளவிலான அகழிகளை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

