வட்டிக்கு பணம் வாங்கியவரின் வீட்டை எழுதி வாங்கியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஃபைனான்சியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கோட்டைகளம் தெருவில் வசித்து வந்தவர் பாண்டியன் என்ற பழக்கடை பாண்டி (71). இவருக்கு வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசிக்கும் நிலையில், மனைவி வசந்தா உடன் தனியே வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
பாண்டியனுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதே பிரதான தொழில். இந்நிலையில் கடந்த திங்களன்று காலை அவரது வீட்டில் இருந்து வெளியே வந்த பாண்டியனை வாசலில் வைத்தே மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேனி காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனது கணவர் கொலை வழக்கில் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக பாண்டியன் மனைவி வசந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த வனிதா என்பவருக்கு தனது கணவர் பாண்டியன் பணம் கொடுத்து, அதனை அவர் திரும்பதராததால் அதற்கு ஈடாக அவரது வீட்டை கிரையம் செய்து கொண்டார். எனவே வனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், சந்தேகப்படும் நபர்கள் அனைவரும் தலைமறைவாக இருந்ததை தொடர்ந்து, அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் அல்லிநகரம் வீரப்ப ஐயனார் மலைக்கோயிலுக்கு செல்லும் பகுதியில் உள்ள தோட்டப்பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்று குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அல்லிநகரம் வனிதா என்பவர் அவரது மகள் திருமணத்திற்காக கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பாண்டியனிடம் 3.5 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், அதற்கு பாண்டியன் வட்டிக்கு வட்டி என பத்து வருடங்கள் கழித்து ரூ.15 லட்சம் பணம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதில் ரூ.13 லட்சம் பணம் கொடுத்த பின்பும், நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று வீட்டை கிரையம் முடித்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், வீட்டு பெண்களை பாண்டியன் தவறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வனிதாவின் சகோதரர்கள் கர்ணன் மற்றும் பிரபாகரன் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டு, பத்து நாட்களுக்கு மேலாக அவரது தினசரி நடவடிக்கைகளை மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
இந்நிலையில் கடந்த திங்களன்று அவரது வீட்டு வாசலில் வைத்தே பாண்டியன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கார்த்திகாவின் சகோதரர்களான கர்ணன்(38), பிரபாகரன்(34), கார்த்திகாவின் மகன் மனோஜ்குமார் (21), இவரது நண்பர்களான வீரபாண்டி (27), சிவக்குமார் என்ற டைகர் சிவா (44), வைரம்(20) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நடுவழியில் நின்ற பேருந்தை தள்ளிய மாணவர்கள்
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வனிதா, அவரது கணவர் இராஜசேகர், கார்த்திகா ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் மற்றும் கம்பிகள், இரண்டு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பாண்டியன் மீது கொலை வழக்கு, வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

