டேட்டிங் செயலி மூலம் அறிமுகமானவரை நம்பிச் சென்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணம் மற்றும் செல்போனை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை அருகே உள்ள விஜயமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், ஆண்களுக்கான டேட்டிங் செயலி ஒன்றில் தனது பெயரை பதிவு செய்து வைத்திருந்தார். அந்த செயலி மூலம் அறிமுகமான ஒருவரின் அழைப்பை ஏற்று, தனிமையில் இருப்பதற்காக அந்த இளைஞர் கோசவநடப்பு கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே திட்டமிட்டு காத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த இளைஞரை சுற்றி வளைத்து கத்தியாலும், கம்புகளாலும் தாக்கியுள்ளது. மேலும், அவருடைய செல்போன், அவர் அணிந்திருந்த 1.5 கிராம் தங்க காதணி, 1,500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவருடைய ஜிபே பின் நம்பரையும் மிரட்டிப் பெற்றுக் கொண்டு, அவரை அங்கேயே விட்டுச் சென்று விட்டது .
இதில் பலத்த காயம் அடைந்த அந்த இளைஞர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செயலி மூலம் அறிமுகமான நபரை நம்பி சென்ற இளைஞர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இளைஞர்களிடம் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி, தனிமையில் இருப்பதற்காக வரவழைத்து, அவர்களைத் தாக்கி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல், டேட்டிங் செயலியில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளியில் சொல்வதில்லை.
எனவே, செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும் நபர்களை எளிதில் நம்பி, தனிமையான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

