வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2.48 லட்சத்தை இழப்பீடாக வழங்க தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகளுக்கு சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி அன்று மாதவரம் 200 அடி சாலையில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஜெயக்குமார் கீழே விழுந்து படுகாயமடைந்தார். விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேனி மக்களவை தொகுதி திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான காரை அவரது மகள் சாந்தி ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தேனி திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகள் சாந்தி ஆகியோர் தனக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார், சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எஸ்.ராஜேஷ்குமார், பாதிக்கப்பட்ட ஜெயக்குமாருக்கு 2 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாயை 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகள் சாந்திக்கு உத்தரவிட்டார்.

