தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி இரவு ஆண் நண்பருடன் 21 வயதான கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பீளமேடு காவல்துறையினர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை துடியலூர் அருகே துப்பாக்கியல் சுட்டு கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை, கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், குற்ற சம்பவ இடத்தில் கைப்பற்றிய தடயங்கள், மரபணு பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தடயங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் 112 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். சாட்சிகள் விசாரணை கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது. கல்லூரி மாணவி, மாணவியின் ஆண் நண்பர், மாணவியின் தாய், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சாட்சியம் அளித்தனர். 21 நாட்களில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பி.ஜிஷா, எதிர்தரப்பு வக்கீல் சசிகுமார் ஆகியோரும் வாதம் செய்தனர். இருவரது வாதங்களும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேர் மதியம் 2.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார்கள். இதைத்தொடர்ந்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு விவரங்களை அறிவிக்கவுள்ளார். இந்த வழக்கில் மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த குற்றம் சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த 300 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்தனர்.

