உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அன்றாடம் டயட், உடற்பயிற்சி என்றெல்லாம் என்னென்னவோ செய்வார்கள். அதெல்லாம் விட ஒரு சூப்பரான விஷயம் இருக்கிறது. இந்தவொரு விஷயத்தை செய்தால், ஒரு நாளைக்குச் சராசரியாக 270 கலோரிகளை இயற்கையாகவே குறைக்க உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அந்தவொரு விஷயம்… நல்ல தூக்கம்!
தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல. அது ஒரு முக்கியமான உயிரியல் மாற்றம் என்கின்றனர் மருத்துவர்கள். சமீபத்திய மருத்துவ ஆய்வொன்று, இதனை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது. அதன்படி 7 மணி நேரம் உறக்கம் என்பது, உடலிலுள்ள சிதைந்த திசுக்களை
சீரமைக்கிறது. முறையான தூக்கம் இல்லையென்றால், இந்த சீரமைப்பு பணி சரியாக நடக்காமல் போகும். அது மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், உடலில் நச்சுப்பொருட்கள் சேர வழிவகுக்கும் என்கின்றனர்.
4 – 5 மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு, 48 மணி நேரம் தூங்காமல் இருப்பவர்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு ஏற்படும் என எச்சரித்துள்ளது அந்த ஆய்வு. இதுபோன்ற காரணங்களால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேயளவிற்கு தூக்கத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே அந்த ஆய்வு வலியுறுத்தும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.
நல்ல தூக்கத்தின் மூலம், நீண்ட கால நோய்களிலிருந்து நம்மால் உடலை காக்க முடியும். ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க, நல்ல தூக்கம் என்பது அடிப்படை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இரவில் 7 – 8 மணி நேரம் தூங்குவது, ஒரு நாளைக்குச் சராசரியாக 270 கலோரிகளை இயற்கையாகவே குறைக்க உதவும். எடை மேலாண்மை, ஆரோக்கியமான உடல் போன்றவற்றுக்கு சீரான கலோரி எரிப்பு மிக மிக அவசியமானது.
போதிய தூக்கம் இல்லாதபோது, பசியைத் தூண்டும் கிரெலின் ஹார்மோன் அதிகரிப்பதையும், பசியைக் குறைக்கும் லெப்டின் ஹார்மோன் குறைவதையும் ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் நாம் அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடுகிறது. சரியாக தூங்கும்போது பசி ஹார்மோன் சுரப்பு சீராகி, நம்மால் உடலில் கலோரி எரிப்பை சீராக்கிக் கொள்ள முடியும்.
5 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வில், 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு ரத்தச் சர்க்கரை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இறப்புக்கான அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வாழ்க்கையில் என்ன நடந்தாலும், எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் அன்றாடம் இரவு 6 – 8 மணி நேரம் தூங்கிவிடுங்கள். ஏனெனில் அதுமட்டுமே நீங்கள் மறுதினம் ஓடும் சக்தியை கொடுக்கும்!

