பேரனின் மனைவியிடம் தகராறு செய்த மருமகளை மாமனார், நுங்கு சீவும் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அடுத்த வேலூர், திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியான பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் அபிமன்யு. இவர் சென்னையில் பணியாற்றி வந்தபோது, தன்னுடன் பணியாற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் பிரதீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலூர் பகுதிக்கு வந்து நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அபிமன்யு மாற்று சமூக பெண்ணை, காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல், அவரது தந்தையான முனியன், முனியனின் மூன்றாவது மனைவி கவிதா ஆகியோர் அடிக்கடி பிரதீபாவை தாக்கி, அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அபிமன்யு, நுங்கு வியாபாரத்திற்காக வெளியூர் செல்வதால் தனது தாத்தாவான சாமுண்டி என்பவரை தனது மனைவி பிரதீபாவிற்கு பாதுகாப்பிற்காக இருக்கும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் கவிதா, பிரதீபாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாமுண்டி தடுக்க சென்றுள்ளார். ஆனால் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சாமுண்டி, நுங்கு வெட்டும் கத்தியால் கவிதாவின் கழுத்தை வெட்டியுள்ளார், இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அதனை தடுக்க சென்ற முனியனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் முனியனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

