புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
30 சட்டமன்றத் தொகுதிகளை உடைய புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி முதல் தொடங்கி 23 வரை நடைபெறுகிறது. புதுச்சேரியில் தற்போது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறமும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்- திமுக கூட்டணி மறுபுறமும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் இம்முறை அதிமுக மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சி இணைந்துள்ளன. புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமிக்கு ஜோஸ் மார்டின் கட்சி கூட்டணியில் இணைந்ததில் விருப்பமில்லை என தகவல்கள் வெளியாகின. இதனால், கடந்த சில நாள்களாக தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்கு பிடிகொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்தார். இறுதியாக புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மன்சுக் மாண்டவியா – முதலமைச்சர் ரங்கசாமிற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில், பாஜக 10 தொகுதிகளில், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
அதனைத்தொடர்ந்து, பாஜக அவர்களுக்கான 10 தொகுதிகளில் முதற்கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் அ.நமச்சியாவம் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் களம் காண்கிறார்.
மண்ணடிப்பேட்டை – ஏ. நமச்சிவாயம்
ஊசுடு (தனி) – இ. தீப்பாய்ந்தான்
காலாப்பேட் – பி.எம்.எல். கல்யாணசுந்தரம்
ராஜ் பவன் – வி.பி. ராமலிங்கம்
முதலியார்பேட்டை – ஏ.ஜான்குமார்
மணவெளி – எம்பலம் ஆர். செல்வம்
திருநள்ளாறு – ஜி.என்.எஸ் ராஜசேகரன்
நிரவி டி.ஆர். பட்டினம் – டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம்
மாஹே – ஏ. தினேஷன்
அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சிகள் மீதமுள்ளவற்றில் எந்தெந்த தொகுதிகளில் களம் காண்கின்றன என்பதை பொருத்து அதற்கு ஏற்ப 1 தொகுதியின் (அநேகமாக உருளையான்பேட்டை தொகுதி) வேட்பாளர் யார் என்பதை பாஜக இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாக கூட்டணி 16 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் – திமுக கூட்டணி 9 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது. சுயேட்சையாக போட்டியிட்டு 5 வேட்பாளர்கள் வெற்றியை பெற்றிருந்தனர். அதேவேளை, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு உற்சாகம் தரும் விதமாக கடந்த 2024 மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
கடந்த முறை 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவிற்கு இந்த முறை தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு கூட்டணியில் 2 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினமே முதலமைச்சர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே, திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இம்முறை புதுச்சேரியில் இரு கூட்டணிகளுக்கும் இடையே தீவிரமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

