புதுக்கோட்டையில் தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர் விபத்து
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கவலை அளிக்கிறது. புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்து குறித்து நேரில் பாஜகவினர் விசாரித்தபோது, பொதுப்பணித்துறை தேரின் நிலை குறித்து நற்சான்றிதழ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தேரின் அச்சு முறிந்து கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளபோது தமிழக பொதுப்பணித்துறை எப்படி நற்சான்றிதழ் கொடுத்தது என்ற விபரம் புரியவில்லை. தமிழக அரசு காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

