சென்னையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அஸ்ஸாமை சேர்ந்த இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
அந்த சிறுமி, 6 மாதங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளார். அவர், தனது உறவினர் வீட்டில் இருந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரப்பர் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது, அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரூபன்(19) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
பதினைந்து நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியிடம் ரூபன் ஆசை வார்த்தைக் கூறி கொட்டிவாக்கத்தில் தான் வசிக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
பின்னர், அதே கம்பெனியில் தன்னுடன் வேலை பார்த்து வரும் நாகாலாந்தை சேர்ந்த ஆலன் உசேன்(19) என்பவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர், மீண்டும் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி தன் வீட்டுக்கு அழைத்து சென்று நண்பருடன் சேர்ந்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. நடந்தவற்றை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அந்த சிறுமியிடம் இருவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு, இருவரும் மீண்டும் அந்த சிறுமியை உல்லாசத்திற்கு அழைத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, இது குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரூபனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நாகலாந்து இளைஞர் ஆலன் உசேனை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
பீகாரில் இருந்து பிழைப்புக்காக வந்த சிறுமியிடம் நட்பாக பழகி, அவரை நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து , கொலை மிரட்டல் விடுத்த ரூபன் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

