சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 ரிசார்டுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்கள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, கோவை தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்ட விரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியில் உள்ள 53 ரிசாட்டுகள் மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 11 ரிசார்ட்கள் உரிய அனுமதி பெற்று செயல்படுவதாகவும், 42 ரிசார்ட்கள் எந்தவித அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரியவந்தது. அதனால், அவற்றை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம், இன்னும் பல தனியார் ரிசார்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதுகுறித்த விவரங்களை மனுவாகத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார். அப்போது, ரிசார்டுகளை அகற்றுவது தொடர்பாக புதிய அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ரிசார்ட் உரிமையாளர்கள் சார்பில், சீல் வைக்கப்பட்ட ரிசார்ட்டுகள் தொடர்பான மேல்முறையீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழக்கை சுட்டிக்காட்டி விசாரிக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டனர். அப்போது நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிக்கலாம் என்றும், அதற்கு இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

