தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக பொதுமக்கள் 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாடு அறை எண் 1950, தொலைபேசி எண் 04364 299960, மற்றும் 1800 233 9960 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் மாநில எல்லை 2 சோதனை சாவடிகள், மாவட்ட எல்லைகளில் உள்ள மூன்று சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் பரிசு பொருட்கள் பணம் வழங்குவதை தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தலா 27 குழுவினர், 6 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி, பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் மாவட்ட தேர்தல் நடத்தை அலுவலருமான ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டார். மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறைகள் மற்றும் காவல்துறையினர் 6810க்கு மேற்பட்ட அலுவலர்கள் தேர்தல் பணியில் உள்ளனர். இந்நிலையில், பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட சங்கரன்பந்தல் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் செம்பனார்கோவில் வட்டார கல்வி அலுவலர் புனிதவதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், இரண்டு ஐம்பொன் சிலைகள் இருந்தது கண்டறியப்பட்டது. ஒரு அடி உயரத்தில் இருந்த நடராஜர், சிவகாமசுந்தரி சிலைகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர், சிலைகளை எடுத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் செந்துரையைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சிலைகளை எப்போதும் கையிலேயே எடுத்துச் சென்று வழிபட்டு வருவதாக மாதேஸ்வரன் தெரிவித்த நிலையில், தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலைகளை தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிலை பறிமுதல் செய்யப்பட்டது குறித்து மாதேஸ்வரன், தன்னிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாகவும், அதனை சமர்ப்பித்து சிலைகளை மீட்டு செல்வேன் என்று தெரிவித்துள்ளார். இந்த ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

