பள்ளி முடிந்து வரும்போது மயங்கியதாக கூறப்பட்ட நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு சந்து காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகானந்தம் – அனுசியா தம்பதி. தேயிலை விவசாயிகள். இவர்களது மகன் புகழேஷ் (14) குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், புகழேஷ் கடந்த 5ஆம் தேதி பள்ளி முடிந்து சக மாணவர்களுடன் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறி உடனிருந்த மாணவர்கள் அவரை ஆட்டோவில் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் புகழேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி குன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்ற நிலை உருவானது. பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, புகழேஷின் உடல் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.
உடற்கூறாய்வு முடிந்த பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்ட உடற்கூறாய்வு அறிக்கையில், புகழேஷ் தாக்கப்பட்டு உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து மேல் குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பள்ளியில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த ஒரு மாணவரின் மீது மற்ற மாணவர்கள் விளையாட்டுத்தனமாக புகழேஷை தள்ளிவிட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த மாணவர் புகழேஷை தாக்கியுள்ளார்.
மேலும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியிலும் அந்த மாணவர் நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் புகழேஷை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலிலேயே புகழேஷ் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். பள்ளியில் நடந்த விளையாட்டுத்தனமான தகராறு உயிரிழப்பாக மாறிய இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

