இணைய மோசடியால் தனது நண்பரின் திருமணம் நிச்சயார்த்தம் வரை சென்று நின்றதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் பேரணி நடைபெற்றது. போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், நடிகர் சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “எனக்கு தெரிந்த ஒரு 90-ஸ் கிட் நண்பர் ஒருவர் மேட்ரிமோனி செயலியில் பெண்ணின் போட்டோவை பார்த்தார். பார்த்ததும் அவருக்கு பிடித்துவிட்டது. உடனே திருமணத்திற்கு பதிவு செய்து அவர்களுக்கு நிறைய பரிசுகளை கொடுத்து நிச்சயதார்த்தம் வரை சென்றது. அதன் பின்பு தான் தெரிந்தது, அது ஏஐ செயலி மூலம் உருவாக்கப்பட்ட போலியான பெண் புகைப்படம் என்று.
இதைத்தான் ‘ரொமான்ஸ் ஸ்கேம்’ என்று கூறுவார்கள். அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் வீட்டுக்குள் புகுந்து திருடுவார்கள். இப்பொழுது வீடியோ காலில் திருடுகிறார்கள். அதைதான் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்று பயமுறுத்துகிறார்கள்.
இது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 64 பேரை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக கூறுகின்றனர். அதுபோல, 300 கோடி ரூபாயை மீட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் இது போன்ற குற்றங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
எங்கிருந்தோ ஒருவர் ஒரு போலி கணக்கை வைத்துக்கொண்டு நம்மை எளிதாக ஏமாற்றி விடுகிறார். இதுபோன்ற குற்றங்கள் நம் கையில் இருக்கும் ஃபோனில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்சப், பேஸ்புக் போன்ற செயலியை வைத்து கொண்டு யாரும் சும்மா இருப்பதில்லை; எப்போது பார்த்தாலும் வாழைக்காய் பஜ்ஜி போடுவது போல, ஸ்வைப் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். இதுதான், நாம் மோசடியில் சிக்குவதற்கான முதல் காரணம்.
தெரியாதவர்கள் உங்களை தொடர்புகொண்டு, வங்கி கணக்கில் பணம் அனுப்பப் போகிறோம் என சொன்னால், உடனே தகவலை கொடுக்காமல் அதனை அருகில் இருக்கக்கூடிய காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி கொடுத்தால் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்.” என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய சைபர் க்ரைம் துணை ஆணையர் ஸ்ரீநாதா, ”டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒரு கான்செப்ட் கிடையாது. சிபிஐ, அமலாக்கத்துறை என எந்தத் துறை சார்ந்தவராக இருந்தாலும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய வாய்ப்பே கிடையாது. அப்படி ஏதேனும் வந்தால், பொதுமக்கள் நம்ப வேண்டாம். உடனே அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவியுங்கள். 1930 டோல் ஃப்ரீ எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனே தொடர்பு கொண்டு புகார் கொடுங்கள். அடுத்ததாக, முதலீட்டு மோசடி (Investment Fraud) நடைபெற்று வருகிறது.
மாதத்திற்கு 40 முதல் 50 சதவீதம் லாபம் வரும் என்று வாட்சப்பிற்கு மெசேஜ் வரும். அதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டாம். முதலீட்டு மோசடி, டிரேடிங் மோசடி தான் தற்பொழுது சென்னையில் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த மோசடியில் ஒரே நபர் ரூ. 24 கோடியை இழந்துள்ளார். எனவே, இதில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ‘சைபர் க்ரைம் பிரிவிலிருந்து பேசுகிறோம்’ என யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால், உடனே அதிகாரப்பூர்வ வலைதளங்களில் சரிபார்க்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை பகிரக் கூடாது. அதிக குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் இருந்து தான் செயல்படுகிறார்கள். அதிலும் சிலர், வெளிநாடுகளில் இருந்து கூட செயல்படுகிறார்கள்.
கடந்த 01.01.2025 முதல் 28.02.2026 வரையிலான ஓராண்டு காலக்கட்டத்தில், இணையவழி குற்றம் தொடர்பாக சென்னை காவல்துறையில் 3,692 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் 164 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் இணையவழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் ரூ.365 கோடி பணத்தை இழந்துள்ளனர். சென்னை காவல்துறை சார்பில், நடவடிக்கை மேற்கொண்டு ரூ.38.3 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு நீதிமன்ற உத்தரவுப்படி அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

