‘ஷூ’ அணியாமல் வந்த பள்ளி மாணவர்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் உய்யூர் என்ற தொழில் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் விஜய்சாய் என்ற பெயரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த மார்ச் 6ஆம் தேதி அன்று இப்பள்ளியில் நடந்தேறிய நிகழ்வு மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
10- ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் இரு தினங்களுக்கு முன்பு ‘ஷூ’வுக்கு பதில் காலணிகளை அணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியை, அந்த மாணவர்களை தங்களின் காலணிகளை கழற்றுமாறு கூறினார். மாணவர்களும் காலணிகளை கழற்றினர். பின்னர், அந்த காலணிகளை கயிற்றில் ஒன்றுசேர்த்து கட்டிய அந்த ஆசிரியை, அதனை மாலையாக மாணவர்களின் கழுத்தில் அணிவித்தார். மாணவர்கள் எவ்வளவு கெஞ்சி கேட்டும் விடாத அந்த ஆசிரியை, அவர்களை செருப்பு மாலையுடன் வகுப்பறையில் சிறிது நேரம் நிற்க வைத்தார். அவமானம் தாங்காத மாணவர்கள், கூனிக்குறுகி நின்றனர்.
பின்னர் வகுப்பு முடிந்ததும் மாலை வீட்டிற்கு சென்ற மாணவர்கள், பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு மாணவனின் தாயார், மறுநாள் காலை பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் சண்டையிட்டார்.
அதற்கு ஆசிரியை, “மாணவர்கள் வண்ணக் காலணிகளை அணிந்து வந்திருந்தனர். மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்ப்பதற்காகவே இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை மாணவர்களை அவமானப்படுத்துவதற்காகவோ (அல்லது) காயப்படுத்துவதற்காகவோ இல்லை. பள்ளியில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகதான்” என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தினரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதன்பேரில் பள்ளிக்கு விரைந்து வந்த உய்யூர் மாவட்ட கல்விப் பிரிவு துணை அதிகாரி பத்மராணி, மண்டல கல்வித்துறை அதிகாரி துர்கா பிரசாத் ஆகியோ விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவர்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை பள்ளி நிர்வாகமே ஒப்புக் கொண்டது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், பின்னர் அவர்களின் உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்விப் பிரிவு துணை அதிகாரி பத்மராணி தெரிவித்தார்.

