தவறான உறவை தட்டிக்கேட்ட கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி ஒன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வல்லத்து நம்பிகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் முருகன் (38). இவருக்கும், முப்புலிபட்டி அருகே உள்ள கோடன்குளம் ஊரை சேர்ந்த சமுத்திரம் என்பவரின் மகள் ஞான அகிலா என்பவருக்கும் 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே, முருகினின் நண்பரான முத்துராஜ், அடிக்கடி இவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் முருகனின் மனைவி ஞான அகிலாவுக்கும், முத்துராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் தவறான உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த முருகன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே ஞான அகிலா முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.இதனை முத்துராஜிடமும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி, ஞான அகிலா தனது கணவர் முருகனிடம் லாவகமாக பேசி வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த முத்துராஜும், அவரது தம்பியான பஞ்ச் ராஜனும் முருகனை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் முருகனின் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஞான அகிலா, முருகன், பஞ்ச் ராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கானது, திருநெல்வேலி ஒன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி செல்வம் நேற்று மாலை தீர்ப்பு வழங்கினார். அதில், “கணவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக மனைவி ஞான அகிலா, அவருடன் தவறான உறவில் இருந்த முத்துராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த பஞ்ச் ராஜன் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், மூன்று பேரும் அபராதமாக தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். இது தவிர கணவரை கொலை செய்வதற்காக, அவரை கடத்திச் சென்ற குற்றத்திற்காக (பிரிவு 364) மனைவி ஞான அகிலாவுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

