மருமகனை கூலிப்படையை ஏவி மாமனார் கொலை செய்த சம்பவம் பள்ளிகொண்டா சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் ராகவன் (30). விவசாயியான இவர் ஸ்வேதா என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்வேதா கே.வி.குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், ராகவன் கடந்த திங்கட்கிழமை இரவு, மனைவியை பணியிலிருந்து அழைத்து வருவதற்காக பள்ளிகொண்டாவில் இருந்து கே.வி.குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பசுமாத்துர் மேம்பாலம் அருகே பின்னால் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ராகவனை தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து ராகவனின் மனைவி ஸ்வேதா புகார் அளித்ததின் பேரில், கே.வி.குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி, இந்த கொலை சம்பவத்தில் ராகவனின் மாமனார் அமல்ராஜ், தனது நண்பர் கார்த்திக் மூலம் பெங்களூருவில் இருந்து கூலிப்படையை ஏவி மருமகனை கொலை செய்தது அம்பலமானது.
அதனை அடுத்து கே.வி.குப்பம் போலீசார் அமல்ராஜ் (46), அவரது நண்பர் கார்த்திக் (29) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும், கூலிப்படையை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ராகவன் தனது மகள் ஸ்வேதாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாலும், ஏற்கெனவே இவர்களுக்கு முன்விரோதமும் இருந்ததாலும் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்ததாக அமல்ராஜ் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த கொலை சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. ராகவனின் குடும்பத்தினர் ஸ்வேதாவை துன்புறுத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் பிடிபடுவார்கள். மேலும் பெங்களூரு கூலிப்படையை சேர்ந்த மற்றவர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
மகளை காதல் திருமணம் செய்துகொண்ட மருமகனை மாமனார் கூலிப்படை மூலம் கொலை செய்த சம்பவம் பள்ளிகொண்டா சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

