காலநிலை மாற்றங்கள் நிகழும் போது, நம்மை சுற்றியுள்ள சூழலில் பல்வேறு நுண்கிருமிகளின் தாக்கம் இயற்கையாகவே அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், உடல் நலனில் நாம் காட்டும் சிறிய கவனக்குறைவும் சில தொற்று நோய்கள் பரவ காரணமாகிவிடுகிறது.
குறிப்பாக, சின்னம்மை போன்ற நோய்கள் பருவகால மாற்றங்களின் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக வேகமாக பரவும் இயல்பு கொண்டவை. இது உயிருக்கு ஆபத்தான பெரிய பாதிப்புகளை தராது என்றாலும், பாதிக்கப்பட்ட நபர் அனுபவிக்கும் உடல் சோர்வும், தோலில் ஏற்படும் எரிச்சலும் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை யாரையும் இந்த வைரஸ் விட்டு வைப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அடுத்த சில நாட்களில் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதால், இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தற்காத்துக் கொள்வது அவசியமாகிறது.
சின்னம்மை: நோய் பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்
இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சின்னம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் (Varicella-Zoster) என்ற வைரஸ் காரணமாக ஏற்படும் மிகவும் எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.
இது ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவுகிறது. பாதிக்கப்பட்டவர் இருமும் போது அல்லது தும்மும் போது காற்றில் வெளிவரும் சிறு நீர்த்துளிகள் மூலமாகவும், உடலில் தோன்றும் கொப்பளங்களில் இருந்து வரும் திரவத்தை நேரடியாக தொடுவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது.
மேலும், நோயாளிகள் பயன்படுத்திய உடைகள், பாத்திரங்கள் மற்றும் படுக்கை விரிப்புகளை பகிர்ந்து கொள்வதும் மற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட முக்கியக் காரணமாக அமைகிறது. இந்த நோயின் அறிகுறிகள் பொதுவாக லேசான காய்ச்சலுடன் தொடங்கும்.
உடல் சோர்வு, தளர்ச்சி மற்றும் பசியின்மை போன்றவை ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக தென்படும். அதன் பிறகு உடலில் சிறிய நீர் திவலைகள் போன்ற கொப்பளங்கள் தோன்றி, பின்னர் உடல் முழுவதும் பரவ தொடங்கும். இந்த நீர்ச்சத்துக் கொப்பளங்கள் ஓரிரு நாட்களில் வெடித்து, பின்னர் காய்ந்து உதிர தொடங்கும்.
பொதுவாகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த நோய் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தினாலும், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்குக் கூடுதல் பாதிப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய நபர்கள் உள்ள வீடுகளில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: சின்னம்மை பாதிப்பு உறுதியானால், நோயைக் கட்டுப்படுத்தவும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கவும் பொது சுகாதாரத்துறை பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், தன் சுத்தம் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுவது மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்வது கிருமிகள் காற்றில் பரவாமல் தடுக்க உதவும்.
உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க அதிகப்படியான தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.
சத்தான உணவுகளை உண்பதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த முடியும்.
பாதிக்கப்பட்டவர்களை அனைத்துக் கொப்பளங்களும் முழுமையாகக் காய்ந்து விழும் வரை, அதாவது சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க உதவும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோய் முழுமையாகக் குணமாகும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், நோய் பாதிப்பு உள்ள பெரியவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளைக் கிருமி நாசினி கொண்டு அல்லது சுடு தண்ணீரில் நன்கு துவைத்து பராமரிக்க வேண்டும்.
நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்: கூடுதல் சந்தேகங்களுக்கு 104 என்ற 24 மணி நேரத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இது தவிர, மாவட்டச் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிப்புகள் குறித்துத் தினசரி தகவல்களை அளிக்க வேண்டும் என்றும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

