நம்மில் பலருக்கு பூனைகள் என்றாலே ஒருவிதமான பிம்பம் உண்டு. அவை எந்நேரமும் தூங்கி கொண்டிருக்கும், தனக்கு தேவைப்படும்போது மட்டும் நம்மிடம் வரும் என்று நினைப்போம். ஆனால், அறிவியல் பூர்வமாக பார்த்தால், பூனைகள் வெறும் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல, அவை நம் ஆரோக்கியத்தை காப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தமும், இதய நோய்களும் அதிகரித்து வரும் சூழலில், ஒரு பூனையுடன் நேரத்தை செலவிடுவது மருந்து மாத்திரைகளை விட சிறந்த பலனை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு பூனை உங்கள் மடியில் அமர்ந்து மெல்லிய ஒலியை (Purring) எழுப்பும் போது, அது உங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்கள் எக்கச்சக்கம் என்கிறது ஆய்வுகள்.
அந்த வகையில், பூனைகள் வளர்ப்பது எப்படி இதயத் துடிப்பை சீராக்குகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் தனிமையைப் போக்குகிறது என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பூனைகள்: இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பூனைகள் கணிசமாக குறைப்பதாக 2023-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றது. பூனை வளர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களை விட மிக குறைவு.
இதற்கு முக்கியக் காரணம், பூனைகள் நம் மன அழுத்தத்தை குறைக்கின்றன. பூனையை தடவிக் கொடுக்கும்போது நம் உடலில் ‘ஆக்ஸிடோசின்’ (Oxytocin) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய துடிப்பை சீராக்குகிறது. பூனை உங்கள் மடியில் தூங்கும்போது, நம்மிடம் உள்ள கவலைகள் மற்றும் பதற்றம் தானாகவே குறைய தொடங்குகின்றன.
பூனையின் ‘புர்’ (Purr) ஒலியின் ரகசியம்: பூனைகள் ஒருவிதமான மெல்லிய அதிர்வு ஒலியை எழுப்பும். இது 25 முதல் 150 ஹெர்ட்ஸ் (Hertz) அதிர்வெண் கொண்டது. மருத்துவ ரீதியாக இந்த அதிர்வெண் எலும்புகளை குணப்படுத்தவும், திசுக்களைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்கிறது The felid purr: A healing mechanism? என்ற தலைப்பில் வெளியான ஆய்வு.
பூனையின் இந்த ஒலி நம் உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும், காயங்கள் விரைவில் ஆறவும் உதவுவதாக நம்பப்படுகிறது. இது ஒரு இயற்கை வைத்தியம் போலச் செயல்படுகிறது. அந்த ஒலியைக் கேட்கும்போது நம் நரம்பு மண்டலம் அமைதியாகி, பதற்றமான நிலையிலிருந்து நிதானமான நிலைக்கு மாறுகிறது.
மன அழுத்த மேலாண்மை: பூனைகள் வாழும் முறையே ஒரு பாடம். அவை எதற்கும் கவலைப்படுவதில்லை, பசிக்கும்போது சாப்பிடும், சோர்வாக இருக்கும்போது தூங்கும். இத்தகைய ஒரு ஜீவனுடன் வாழும்போது, நாமும் தேவையற்ற கவலைகளை தவிர்க்கப் பழகுகிறோம். தனிமையில் இருப்பவர்களுக்கும், மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பூனைகள் ஒரு சிறந்த துணையாக இருக்கின்றன.
அவை நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் நம்முடன் அமைதியாக அமர்ந்திருப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பான உணர்வைத் தருகின்றன. காலையில் பூனைக்கு உணவு வைக்க வேண்டும் என்ற கடமைக்காகவே, மனச்சோர்வில் இருப்பவர்கள் படுக்கையை விட்டு எழுந்து தங்களைச் சுறுசுறுப்பாக்கிக் கொள்கிறார்கள்.
குறைந்த பராமரிப்பு, அதிக அன்பு: நாய்களைப் போலப் பூனைகளை வெளியில் அழைத்துச் சென்று நடைப்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவை மிகவும் சுதந்திரமானவை. இதனால் உடல் நடமாட்டம் குறைந்த முதியவர்கள் அல்லது சிறிய வீடுகளில் வசிப்பவர்களுக்குப் பூனைகள் மிகச் சிறந்த தேர்வாகும்.
தனிமை என்பது இன்று ஒரு பெரிய ஆரோக்கியப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஒரு பூனை வீட்டில் இருக்கும்போது அந்தத் தனிமை உணர்வு மறைந்து, வீட்டில் ஒரு உயிர் இருக்கிறது என்ற நிம்மதி கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
தியானம் பழகத் தேவையில்லை: நவீன உலகில் ‘மைண்ட்ஃபுல்னஸ்’ (Mindfulness) எனப்படும் ‘தற்கணத்தில் வாழும் கலை’யைக் கற்கப் பல வகுப்புகளுக்குச் செல்கிறோம். ஆனால் ஒரு பூனை அதை இயல்பாகவே செய்யும். ஒரு நிழல் அசைவதையோ அல்லது ஜன்னல் வழியாக வரும் காற்றையோ பூனைகள் கூர்ந்து கவனிக்கும்.
அவற்றுடன் நேரத்தைச் செலவிடும்போது, நாமும் போன் அல்லது லேப்டாப்பைத் தள்ளி வைத்துவிட்டு, அந்தச் சிறிய விஷயங்களைக் கவனிக்கத் தொடங்குவோம். இந்த நிதானம் நம் ரத்த அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைத் தருகிறது.

