தென்காசி பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து இரவிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றால சாரல் மழை
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று குறைவாக விழுகிறது. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திலேயே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் முதியவர்கள் அருவிக்கு செல்வதில் சிரமம் உள்ளது. மேலும், குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மட்டும் இரவு முழுவதும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே இங்கும் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

