பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 8 உலோக சிலைகளை கும்பகோணம் அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பழங்கால சிலைகள்
சமீபகாலமாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விலைமதிக்க முடியாத காணாமல் போன பல தொன்மையான சிலைகளை கைப்பற்றி வருகின்றனர். தற்போது 8 பழங்கால சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கும்பகோணம் மாவட்டம் சுவாமிமலை அருகில் மாசிலாமணி என்ற நபருக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
அச்சிலைகளை ஆராய்ச்சி செய்ததில் அவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என தெரிவிக்கபட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டதில் போக சக்தியம்மன், 9 அடி உயர சிவகாமி அம்மன், விஷ்ணு, இரு புத்தர் சிலைகள், ஆண்டாள், நடராஜர், ரமண மகரிஷி ஆகும்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாசிலாமணியிடம் சிலைகள் எந்த எந்த கோவில்களில் திருடப்பட்டது, சிலைகளை திருட உதவியவர்கள் யார் ? என்பன குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி
கடந்த வாரம் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பழங்கால கோவில் சிலைகள் சென்னை பிராட்வே பகுதியில் பமீலா இமானுவேல் என்றவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி, டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, மோகன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், வசந்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை உருவாக்கப்பட்டது.
அந்த தனிப்படை போலீசார் பமீலா இமானுவேல் வீட்டில் புகுந்து சோதனை நடத்தினார்கள். அச்சசோதனையில் தட்சிணாமூர்த்தி சாமி சிலை முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அந்த வீட்டில் ரகசிய அறை ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த அறையில் முருகன், வள்ளி, தெய்வானை, சனீஸ்வரன், அம்மன், வீரபாகு ஆகிய சிலைகள் சிக்கியது. மேலும், பீடத்துடன் கூடிய 2 பெண் தெய்வங்கள் சிலைகள் என மொத்தம் 9 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தையும் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

