பூந்தமல்லி அருகே நேற்று காலை ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
பட்டப்பகலில் பயங்கரம்
பூந்தமல்லி அருகே புளியம்பேடு பகுதியில் நேற்று காலை (ஜூலை 26) இருசக்கர வாகனத்தில் வந்த நபரை ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து தப்பியோடினர். இதில் சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து அந்நபர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அறிந்த பூந்தமல்லி உதவி காவல் ஆணையர் முத்துவேல் பாண்டி, காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றினர்.
முன்விரோதமா?
பின்னர் கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்ட நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலைசெய்யப்பட்ட நபர் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(வயது 22) என்பதும், வெள்ளவேடு காவல் நிலையத்தில் அவர் மீது கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் இவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் முன்விரோதமா? என்ற கோணத்தில் காவலர்கள் நான்கு தனிப்படை அமைத்து கொலைசெய்த ஆறு பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

