காவல் நிலையத்தில் மரணமடைந்த விக்னேஷ் -ற்கு நீதி வாங்கி கொடுப்பாரா முதல்வர்? – பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்வீட்!
இருவர் கைது
சென்னையில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அவற்றை விரைந்து தடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையத்திற்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி போலீசார் சென்னையில் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னல் அருகே சென்னை தலைமை செயலக காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது, ஆட்டோவில் வந்த 2 இளைஞர்களை விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் முன்பின்னாக பதில் கூறியதாகவும் போலீசாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களை சோதித்தபோது கத்தி, கஞ்சா இருந்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் திருவல்லிகேணியை சேர்ந்த 28 வயதான சுரேஷ் என்பதும், இன்னோருவர் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயதான விக்னேஷ் என்பதும் தெரியவந்தது.
இளைஞர் மரணம்
போலீசார் அவர்கள் இருவர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இரவு முழுவதும் அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. திடீரென காலையில் விக்னேஷ்ற்கு உடல் நிலை சரியில்லாமல் போக, போலீசார் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிர்யிழந்தார்.
மாஜிஸ்ரேட் விசாரணை
தகவலறிந்த உறவினர்கள் மிகவும் கொந்தளித்து போனார்கள். விக்னேஷை போலீசார் தான் விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்று விட்டார்கள்.
சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி எழும்பூர் குற்றவியல் மாஜிஸ்ரேட் யஸ்வந்த் ராவ் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது காவல் துறை சார்பாக விக்னேஷ் மரணத்திற்கு சொன்ன காரணம், அவருக்கு திடீரென வலிப்பு வந்துவிட்டதாகவும் அதனால் தான் அவர் இறந்துவிட்டார் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
விக்னேஷின் உடலை மாஜிஸ்ரேட் யஸ்வந்த் ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், விக்னேஷின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதுவும் விசாரணைக்காக வீடியோ பதிவு செய்யப்பட்டது.
ஆனால் விக்னேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் காவல் துறையே அடக்கம் செய்ய எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை ட்வீட்
போலீசார் மீது அடுத்தடுத்த குற்றசாட்டுகள் குவிந்தது. உடனே இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டார்.
அதில், ‘சென்னையில் காவல்துறை விசாரணையின்போது மர்மமான முறையில் விக்னேஷ் என்கின்ற இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். முதல்வர் கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா? என்று முக ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
சென்னையில் காவல்துறை விசாரணையின்போது, மர்மமான முறையில் விக்னேஷ் என்கின்ற இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
அவருடைய உடலையும் குடும்பத்தினருக்கு ஒப்படைக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். @CMOTamilnadu கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா? pic.twitter.com/3fUBNb7VY0
— K.Annamalai (@annamalai_k) April 20, 2022
மேலும், திமுக அரசு கண்டிப்பா இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.