உத்திர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. தேர்தல் முடிவுகளின் படி பஞ்சாப் தவிர்த்து பிற நான்கு மாநிலங்களிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி ஆட்சியை பிடித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. அதேபோல், மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும் மிக பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது காங்கிரஸ்.
இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து டெல்லியிலுள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பினுக்கு பின்னர் பேசிய பிரதமர் மோடி, பாஜகவின் இந்த பிரமாண்ட வெற்றியை உறுதி செய்த கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி.
மக்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே வளர்ச்சி அரசியலை நோக்கி வாக்களிக்க தொடங்கிவிட்டனர். உத்திர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் சிறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான ஆட்சி தொடரும். ஏழைகள் தங்களுக்கான உரிமைகளை பெரும் வரையில் நான் ஓய்வெடுக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நாங்கள் பெற்ற வெற்றியே, 2019 மக்களவை தேர்தலில் எதிரொலித்ததாக அரசியல் நோக்கர்கள் அப்போது தெரிவித்திருந்தார்கள். அதேபோல், தற்போது நாங்கள் உத்திரபிரதேசத்தில் பெற்றுள்ள வெற்றியும் எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.