உலகத்தில் தலைசிறந்த தேர்தல் ஜனநாயக கட்டமைவை கொண்டது நமது இந்திய தாய்த் திருநாடு. இங்கே எளியவர்களாவும் – ஏழைகளாகவும் இருந்த எத்தனை எத்தனையோ தலைவர்களை அதிகாரத்தின் உச்ச பீடங்களில் ஏற்றிவைத்து அழகு பார்த்திருக்கின்றனர் நாட்டு மக்கள். அதற்கான காரணம், எளியவர்களாவும், ஏழைகளாகவும் இருந்த போதிலும், இவர்கள் நமக்கானவர்கள் என குறிப்பிட்ட தலைவர்களை பொதுமக்கள் கருதியதுதான். அதேபோல், இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் வித்தியாசமான நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.
அப்படியான ஓர் நிகழ்வுதான் தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் அரங்கேறியிருக்கிறது. இருபெரும் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தினை எட்டிப்பிடித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அதற்கான காரணம், அக்கட்சியின் தேசிய தலைமை, டெல்லியில் அக்கட்சி வழங்கி வரக்கூடிய ஆட்சி மீதான நல்லெண்ணம் என்பதைப்போலவே, இந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார சமயத்தில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவத்மான்சிங் என்பவர் நியமிக்கப்பட்டதுவும் ஓர் முக்கிய காரணமாகும்.
நகைச்சுவை நடிகரான பகவத்மான்சிங் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இணைந்த உடனே அப்போது நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அகாலிதளத்தின் தலைவரான சுக்தேவ் சிங் திண்ட்சாவை சுமார் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார் பகவந்த்மான்சிங். அதிலிருந்து கெஜ்ரிவாலின் தனியான மரியாதையை பெற்றிருந்தார் பகவந்த்மான்சிங்.
அதேபோல், 2017 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பகவந்த்மான், தற்போதைய தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிவாகை சூட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியமைக்க உள்ளது ஆம் ஆத்மி.