விளையாட்டு

வாய்ப்பை அள்ளித்தரும் 2022 ஐபிஎல்; ஜொலிக்கத் துடிக்கும் இளம் வீரர்கள்!

ஐபிஎல் ஒரு வரப்பிரசாதம்

2022 க்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26 ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர். 8 அணிகள் விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக களமிறங்குகின்றனர்.

ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கும், திறமை வாய்ந்தவர்களுக்கும் வாய்ப்பை அள்ளித்தரும் ஒரு இடமாகவே அமைந்துள்ளது. இவ்வருட ஐபிஎல் ஆக்ஷனிலும் நிறைய இளம் வீரர்கள், குறிப்பாக இந்திய இளம் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றனர்.

70 லீக் போட்டிகள் 4 பிலே ஆஃப் போட்டிகள் என மொத்தம் 74 போட்டிகள் கொண்ட நீண்ட தொடராக 2022 ஐபிஎல் இருப்பதால் நிறைய இளம் வீரர்களுக்கு பிலேயிங் லெவன் யில் வாய்ப்பு கிடைக்கலாம். கடந்த ஐபிஎல் தொடர்களில் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு சர்வதேச அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அங்கேயும் ஜொலித்திருக்கிறார்கள். சர்வதேச அணிக்கு ஐபிஎல் தொடரிலிருந்து தலைசிறந்த வீரர்கள் தேர்தெடுக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

2008 ல் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தங்கள் வாழ்நாளை தொலைத்த வீரர்கள் ஏராளம். அவர்களுக்கு எல்லாம் ஐபிஎல் தொடர் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவ்வாறு இவ்வருட ஐபிஎல் தொடரில் இடம்பிடிக்க போகும் இளம் வீரர்களை பற்றி பார்ப்போம்.

ராஜ் பவா
இந்திய அண்டர் 19 அணியின் அதிரடி இளம் வீரராக விளங்குபவர் ராஜ் பவா. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்குகிறார். U19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள ராஜ் பவா வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் கிடைக்க வாய்ப்புள்ளது.

டிவால்ட் பிரவீஸ்
U-19 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசியவர் டிவால்ட் பிரவீஸ். தென்னாப்பிரிக்க வீரர். மிஸ்டர் 360 ஏபி டிவில்லியர்ஸ் போல் அதிரடியாக விளையாடுவதால் பேபி டிவில்லியர்ஸ் என வர்ணிக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார். மும்பை அணி சிறப்பாக இளம் வீரர்களை பயன்படுத்தி வருவதால் டிவால்ட் பிரவீஸ் ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது.

யாஷ் துல்
இந்திய கிரிக்கெட்டின் இளைய விராட் கோலி என்று அழைக்கப்படும் யாஷ் துல் டெல்லி அணியில் தேர்வாகியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் விராட் கோலியோடு யாஷ் துல் ஒப்பிட்டு பேசப்படுவது அவர் விளையாட்டின் மேல் எதிர்பார்ப்பை தூண்டிவருகிறது. அண்டர் 19 உலககோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக யாஷ் துல் ஆடிய ஆட்டம் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. தற்போது ரஞ்சி தொடரிலும் யாஷ் துல் சதம், இரட்டை சதம் என அடித்துள்ளார். இதனால் யாஷ் துல் ஐபிஎல் மூலம் நட்சத்திரமாக வளர்வார் என எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

ராஜவர்த்தன் ஹங்கர்கேகர்
ஹங்கர்கேகர் சிறந்த வேகப்பந்துவீச்சிற்கும், அதிரடி பேட்டிங்கிற்கும் பெயர் போனவர். பந்தை எளிதாக சிக்ஸ்சருக்கு விளாசும் இவரது ஆட்டமுறை ஹர்திக் பாண்டியாவை நினைவூட்டுகிறது. தற்போது ஹங்கர்கேகரை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. பயிற்சியின் போது தோனி ஹங்கர்கேகர் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். தோனியின் தலைமையில் இளம் வீரர் ஹங்கர்கேகர் விளையாடுவதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

விக்கி ஆஷ்ட்வால்
சுழற்பந்துவீச்சாளரான விக்கி ஆஷட்வால் U-19 உலகக் கோப்பையில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். நெருக்கடியான சூழலிலும் துல்லியமாக பந்து வீசுகிறார். ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தன்னை நிரூபிப்பார் என நம்பலாம்.

 

 

Related posts