தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் சமயத்தின் போதே நாங்கள் ஆட்சிக்கு வருவோமேயானால் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் மீது லஞ்ச ஒழிப்பு துறையை கொண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்திருப்பார்களேயானால், குறிப்பிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பேசிவந்தார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
அதனைப்போலவே சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது முதல் அதிமுக முன்னணி தலைவர்கள் மீதும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சோதனைகளின் அடிப்படையிலும் பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு துறையின் இரண்டாவது சோதனைக்கு ஆளானார் எஸ்.பி வேலுமணி.
வேலுமணியின் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை குறித்து பேசியுள்ள அதிமுக முன்னணி தலைவர்களுள் ஒருவருமான சி.வி சண்முகம், “திமுக ஆட்சியே தொடரும் என்ற நம்பிக்கையில் நீங்கள் இத்தகைய நடவடிக்கைளில் ஈடுபடுவீர்களானால் இன்னும் ஐந்தாண்டு கழித்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இல்லங்களில் அந்த துறையை கொண்டே சோதனை நடத்தப்படுமென” பேசியுள்ளார்.
முன்னதாக, திமுக தலைமை திட்டமிட்டே அதிமுகவின் முன்னணி தலைவர்களை இயங்க விடாமல் செய்யப்பார்க்கிறதென ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.