ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, இன்றைய போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 260 ரன்களை குவித்தது.
தொடர்ந்து, 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்மன்ப்ரீட் கவுர் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாட எதிர்முனையில் விக்கெட்டுகள் சரியத்தொடங்கியது.
ஒருகட்டத்தில் நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் ஹர்மன்ப்ரீட் கவுர் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்தின் சார்பில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி 75 ரன்கள் குவித்த சான்டர்த்தவைட் சிறந்த ஆட்டக்காரர் விருதினை பெற்றார்.
தொடருக்கு முன்பிருந்தே பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது. தோல்வியால் சோர்வடையாமல் வருகிற மார்ச் 12 தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பவேண்டும் என்ற ஆவலும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.