கடந்த ஐபிஎல் சீசனின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த 11 பேரின் நினைவாக, சின்னசாமி மைதானத்தில் இருந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஐபிஎல் 19ஆவது சீசனின் முதல் லீக் ஆட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ராஜத் படிதார் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து, சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 7 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட்டும் 11 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் கேப்டன் இஷான் கிஷன் மற்றும் நிதிஷ் குமார் ரேட்டி இணை விளையாடி வருகின்றனர். இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மைதானத்தில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. அதன்படி, கடந்தாண்டு ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்த 11 பேரின் நினைவாக மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேற்கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றைய போட்டியில் விளையாடும் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கள் கைகளில் கருப்பு நிறப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஐபிஎல் 2026 தொடரின் போட்டி நாள்களில் நடைபெறும் பயிற்சிகளின் போது, ஆர்சிபி அணி வீரர்கள் அனைவரும் அந்த 11 ரசிகர்களைக் கௌரவிக்கும் விதமாக 11ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து பயிற்சி செய்வார்கள் என்றும், மைதானத்தில் அவர்களின் நினைவாக 11 இருக்கைகள் நிரந்தரமாக ஒதுக்கப்படும் என்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது அறிவித்தது நினைவு கூறத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனாத்கட், ஈஷான் மலிங்கா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி, சுயாஷ் சர்மா

