கிரிக்கெட் வரலாற்றில், நிகழ்கால ஆட்டக்காரர் ஒருவரை முன்னாள் ஜாம்பவான்களோடு ஒப்பிட்டு பேசுவதற்கே ஒருவர் அடைந்திருக்க வேண்டிய இலக்கும் புகழும் பெரியது. அப்படி, உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானாக இருந்த சச்சின் டெண்டுல்கரோடு நிகழ்கால ஆட்டக்காரரான விராட் கோலி சில வருடங்களுக்கு முன்பு ஒப்பிட்டுப் பேசப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
அதற்கு காரணம் விராட் கோலி பயன்படுத்திய ஆட்ட நுணுக்கங்களும்,அற்புதமான ஷாட்டுகளும்,அணிக்கு தேவைப்படும் நேரத்தில் திறம்பட செயல்பட்டு ரன் குவித்ததும்தான்.
கிரிக்கெட் ஜாம்பவான்களே விராட் கோலியை ரன் மெஷின் என்று வர்ணனை செய்தனர். சச்சினின் நூறு சதங்கள் அடித்த சாதனையை விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்த்தனர். இந்நிலையில், சில ஆண்டுகளாக தன் திறமைக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியாமல் கோலி போராடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் திணறுகிறார். கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
விராட் கோலியின் கம் பேக்குக்காக நீண்ட நாட்களாக காத்திருந்து அதிருப்தி அடைந்த ரசிகர்கள் இப்போது கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். விராட் கோலியின் மனதை புன்படுத்தும் வகையிலும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் அவர் மேல் முன்வைத்துவருகின்றனர்.
கோலி மீது விமர்சனங்களும், அதிருப்திகளும் அதிகளவில் முன்வைக்கப்பட்டுவரும் இந்த சூழலில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி விரைவில் தன் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவருக்கு இருக்கும் உடல்தகுதியை பார்க்கும்போது இன்னும் 10 ஆண்டுகள்கூட அவர் விளையாடலாம். கோலியை யாரும் தொடக்கூட முடியாது என்று கூறியுள்ளார். கோலி குறித்த சச்சினின் கருத்துக்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.