விளையாட்டு

எனக்கு எண்டே கிடையாது – இந்திய அணியில் ரீ எண்ட்ரி கொடுக்க விரும்பும் தினேஷ் கார்த்திக்!

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதற்காக வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கை பெங்களூர் அணி 5.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணிக்காக அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 36 வயதிலும் 360 டிகிரியில் ஆடி, மிஸ்டர் 360 என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸின் இடத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்து வருகிறார். ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு 209 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டு இருக்கிறார்.

6 போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 197 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கேட்டகேள்விக்கு பதிலளித்த அவர், “சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. என்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில், தோனியின் ஃப்னிஷர் பொறுப்பிற்கு தினேஷ் கார்த்திக் பொருத்தமான நபர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts