காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்குள் ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது.
உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் அத்தி வரதர் கோவில்108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சித்ரா பவுர்ணமியையொட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி போன்ற பல்வேறு கிராமங்களில் மண்டகப்படி கண்டு அருளியபடி ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அக்கோவிலின் அருகில் பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, மண்டபத்தில் வைத்து, தீபாராதனை செய்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டது. பின்னர் புறப்பாடு நடைபெற்று நள்ளிரவு செவிலிமேடு பாலாற்று படுகையில் வரதராஜர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிலையில் பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அவை கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கிக்கொண்டனர்.
பாலாற்றில் வரதராஜப்பெருமாள் இறங்கும் வைபவமானது சித்ராபௌர்ணமியை முன்னிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது. இதில் இரு பிரிவினருக்கிடையேயான மோதல் இந்நிகழ்வை காண வந்த 1000க்கும் மேற்பட்ட பொது மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.இக்கோவில் உற்சவத்தின் போது பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கே உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் அவ்வுத்தரவை மீறி சில வடகலை பிரிவினர் வேண்டுமென்றே பிரச்சனைகளை எழுப்பி சண்டை போடுவதாக கூறப்படுகிறது.
இதனை இத்திருக்கோவில் மணியக்காரர் அவர்களிடத்தில் நீதிமன்ற உத்தரவினை சுட்டிகாட்டாமல் இது போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து கண்டும் காணமல் வடகலை பிரிவினர்களுக்கு சாதகமாகவே செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமலிருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.