விளையாட்டு

இந்திய மகளிர் அணிக்கு என்னதான் ஆச்சி; ரசிகர்களின் உலகக்கோப்பை கனவு தகர்க்கப்படுகிறதா!

மகளிருக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த உலகக்கோப்பை பைனலில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பெற்றது. அதனால் இப்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பையில் இந்திய அணியின்மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்திய மகளிர் அணி 2022

இவ்வருடம், லீக் சுற்றின் முதல் ஆட்டத்தை பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தனர். இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது இந்திய அணி. முதல் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.

பரிதாபமான ஆட்டம்

லீக் சுற்றின் தனது நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் களம் கண்டது இந்திய அணி. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலிருந்தே தடுமாற தொடங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி 134 ரன்களுக்கு பரிதாபமான நிலையில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் 7 வீராங்கனைகள் வெறும் ஒற்றை இலக்கு ரன்களை மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் கேப்டன் மிதாலி ராஜ் இப்போட்டியிலும் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். சிறிய இலக்கை நோக்கி அடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது. இந்தப்போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி , சர்வதேச கிரிக்கெட்டில் 250 விக்கெட்டை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

மிஸ் ஆகும் கன்சிஸ்டெண்சி

இந்திய அணியின் இதுபோன்ற கன்சிஸ்டெண்சி இல்லாத ஆட்டத்தின் வெளிப்பாடு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற மோசமான ஆட்டம் தொடர்ந்தால் இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் உலக கோப்பை என்பது கனவாகவே இவ்வருடமும் முடிந்துவிடும். இந்நிலையில் ஆட்டத்தில் தோல்வி அடைந்த பிறகு சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்மிருதி மந்தனாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

Related posts