ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கையில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 8ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியுன் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்ததுடன், 3ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரையும் வென்று வரலாற்று சாதனையை படைத்தது.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. மேற்கொண்டு தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி மற்றும் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனைகளையும் இந்தியா படைத்துள்ளது.
மேலும் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு ரூ.27 கோடியுடன் (தோராயமாக), கோப்பையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் (பிசிசிஐ) டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கான பரிசுத் தொகையை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர், அணி ஊழியர்கள், தேர்வாளர் குழுவைச் சேர்ந்தவர் மற்றும் இதர உதவியாளர்கள் என அனைவருக்கும் சேர்த்து ரூ.131 கோடி பரிசு த்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலளார் தேவஜித் சைகியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

