சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முககவசம்
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே சமீப காலமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன்காரணமாக மத்திய, மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் சற்று குறைந்து வந்தது.
அறிவிப்பு
இந்நிலையில், சென்னை விமான நிலைய ஆணையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இதனால் விமான ஊழியர்கள், பயணிகள் என அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். முக கவசம் அணியாதவர்கள் சென்னை விமான நிலையத்துக்குள் அனுமதி இல்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.