மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலணி வீச்சு
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் நேற்று முன்தினம் காலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மதுரை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் வீரமரணம் அடைந்துள்ளார். அவரது இறப்பு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரரின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, அதிமுக ஆர்.பி. உதயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. இச்சம்பவம் அந்தப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின்னரே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

