உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நாளை திரைக்கு வரவுள்ள படம் விக்ரம். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் படத்தைப்பற்றி சில தகவல்களை கூறியுள்ளார். நேற்று அளித்த பேட்டி ஒன்றில் அனிருத் மற்றும் சூர்யா ஆகியோரைப்பற்றி பேசி படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடையே தூண்டிவிட்டார்.
கமலுடன் முப்பெரும் நடிகர்கள்
விக்ரம் படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதலே தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். படத்தின் முதற்பார்வையிலிருந்து டீசர், டிரைலர் என அனைத்தும் தரமாகவே உள்ளது. முதலில் கமல்ஹாசன் மட்டும் நடிக்கப்போவதாக ரசிகர்கள் நினைத்தனர்.
பிறகு படத்தின் முதற்பார்வை, போஸ்டர் என ஒவ்வொன்றாக வெளியாக பேராச்சரியமூட்டும் வகையில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இருவரும் படத்தில் இணைந்துள்ள தகவல் கிடைத்து ஏற்கனவே கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்களுக்கு திருவிழா போன்று ஆனது.
அதன்பிறகு சமீபத்தில் தான் மங்காத்தா படத்தில் வரும் வசனம் போல “கடைசியில தான் வந்து சேர்ந்தாரு விநாயக்” என்பது போல சூர்யா அவர்கள் படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே விருந்து வைத்து அசத்தினர் படக்குழுவினர்.
படத்தில் சூர்யாவின் பங்கு
நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற அழுத்தமான படங்களை கொடுத்து, எதற்கும் துணிந்தவன் என்று குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்புடன் இப்போது இந்த படத்தில் இணைந்துள்ளார்.
இதன்பிறகு இவர் கைவசம் இருக்கும் படங்களும் இவரின் நடிப்பிற்கு தீனிப்போடும் விதமாக பாலாவின் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என நல்ல படங்களாகவே இருக்கும் என அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தற்போது சூர்யா நடித்திருக்கும் விக்ரம் படத்தில் இவருக்கான தனி போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியிட, ரசிகர்கள் அதை வைரலாக்கினர்.
மேலும், படத்தின் இயக்குனர் லோகேஷ் அவர்கள் நேற்று யூட்டியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சூர்யாவின் கதாபாத்திரத்தை உறுதி செய்தார். அதில் அவர் கூறியதாவது, “படத்தில் சூர்யா ‘கவுரவ தோற்றமாக’ இருக்கமாட்டார்; ‘சிறப்பு தோற்றமாக’ இருப்பார்” எனவும் இன்னொரு முறை படத்தின் நேரத்தை பற்றி கூறும்போது “4 பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர்; ஒவ்வொருவருக்கும் 1/2 மணி நேரம் வைத்தாலும்” என கூறுகையில், சூர்யா அவர்கள் சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் மற்ற நடிகர்கள் போலவே இவரும் படத்தில் முக்கியமான அங்கம் வகித்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
அனிருத் இசை
படத்தில் இத்தனை நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தாலும், அனிருத் இசை இல்லாமல் படம் முழுமையடையாது. இவரின் பின்னணி இசைக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. நேற்றைய பேட்டியில் இயக்குனர் அவர்கள் அனிருத்தை பற்றி கூறுகையில் “இவரின் தற்போதைய படங்களை விட இந்த படத்தில் புதுவிதமாக அனிருத்தின் இசையை கேட்க முடியும்; ஆரம்பகாலத்தில் இருந்த அனியை மீண்டும் கொண்டுவந்தது போல் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை” என்று அவர் கூறினார்.
மேலும் இப்படம் மற்ற கமர்சியல் படங்கள் போன்று அல்லாமல் டார்க் த்ரில்லர் படமாக இருப்பதால் லோகேஷ் அனியிடம் சில வார்த்தைகள் கூறியுள்ளார், “இது மார்வெல் போன்ற படமல்ல, டி.சி. போன்ற படமாகும்; இதை மனதில் வைத்து இசையமைக்குமாறு” இயக்குனர் செல்லமாக அனிருத்திடம் கூறியுள்ளார்.
இரண்டாம் பாதி முழுக்க விறுவிறுப்பு
படத்தின் மொத்த நேரம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரும் எனவும், இரண்டாம் பாதியின் நேரம் 1 மணி நேரம் 22 நிமிடங்கள் இருக்கக்கூடும் எனவும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கூறினார்.
அதுமட்டுமின்றி இரண்டாம் பாதி ஆரம்பித்த பிறகு 1 மணி நேரம் முழுவதுமாக இடைவிடாமல் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கும் எனவும் “இதுபோன்ற இத்தனை விறுவிறுப்பு நிறைந்த தமிழ்ப்படங்கள் சமீபத்தில் பார்த்ததில்லை” என்றும் அவர் கூறினார்.