நயினார் நாகேந்திரன் சசிகலாவை பா.ஜ.க. வில் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
பாஜக நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் வென்றவர் பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன். இவர் பாஜக சட்டமன்ற குழு தலைவராக இருந்து வருகிறார். நேற்று நெல்லையில் நடந்த திருமண விழா ஓன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் பத்திரிகையாளர் ஒருவர் சசிகலா பாஜகவில் சேர்வது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ‘சசிகலா பாஜகவில் இணைந்தால் முழு மனதோடு வரவேற்போம். அதிமுகவில் சசிகலா சேர்ப்பது குறித்து அக்கட்சினர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் எந்த கட்சியில் சேர்ந்தாலும் அந்த கட்சி பலன்பெறும். அவருக்கென்று தொண்டர்கள் பலம் இருப்பதால் அவர் எங்கு சென்றாலும் அந்த கட்சி சிறப்பாக இருக்கும். சசிகலா குறித்து நான் கூறியது எனது சொந்த கருத்துக்கள்’ என தெரிவித்தார்.
விமர்சனத்திற்கு பதில்
மேலும், பாரதிய ஜனதா கட்சி அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்பது குறித்த கேள்வி எழுப்பியபோது, ‘பழுத்த பழம் இருக்கும் மரம் தான் கல் எறிபடும். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தற்போது மிக பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. அதன் காரணமாக ஆளும் கட்சினர் எதிர்க்கட்சினர் என பல்வேறு கட்சியினர் பாஜக மீது விமர்சனத்தை முன் வைக்கின்றனர்’ என்று கூறினார்.
இரு மொழி கொள்கை
தமிழகத்தில் இரு மொழி கொள்கையை ஆதரித்தால் மட்டுமே வளர முடியும். அதிமுகவை மண்ணுக்குள் தள்ளும் முயற்சியில் பாஜக செயல்படுகிறது என அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் விமர்சித்து இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘அவருடைய விமர்சனம் குறித்து நான் பதில் கூற விரும்பவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழி கொள்கைதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடாகவும் இருமொழிக் கொள்கை தான் தமிழகத்திற்கு சரியாக இருக்கும்’ என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
2024 அதிமுக பாஜக
‘பாஜக 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பாஜக 25 தொகுதிக்கு மேல் தமிழகத்தில் வெற்றிபெறுவோம் . 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. பாஜக அதிமுகவின் கூட்டணி பலமாக இருக்கிறது’ என்றார்.
அண்ணாமலை
நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து குறித்து பதில் கூறிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அவரது சொந்த கருத்துக்களே தவிர கட்சியின் கருத்தல்ல’ என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.