ஒரு கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கொரியர் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
சென்னையில் போதைப்பொருள்
சென்னை மண்ணடி பகுதியில் போதை பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் வடக்கு மண்டல துணை ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். துறைமுக துணை ஆணையர் தலைமையில் போதை பொருள் வாங்குவதுபோல் போலீசார் மண்ணடி பகுதியில் சுற்றி வந்தனர்.
போலீசார் கைது
அப்போது ஜாகிர் உசேன் என்பவர் போதை பொருள் வேண்டுமா என போலீசாரிடம் கேட்கபோது சுற்றி வளைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பெயரில் முகம்மது, சுல்தான், நாசர், நசீர், அசாருதீன் ஆகிய ஐந்து பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். கைது செய்த ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது.
போதைப்பொருள் கடத்தல்
மெத்தபெட்டமைன் மற்றும் ஆம்பிடமைன் போன்ற போதை பொருட்களை மொத்தமாக வாங்கி விற்று வந்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை செய்வதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இவர்கள் கூலித் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு மொத்த விற்பனையும் செய்து வந்தனர். கொரியரில் சரக்கு விமானம் மூலம் இலங்கை வழியாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டுகளுக்கு கடத்தி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவ்வாறு கடத்துவதற்காக வைத்திருந்த 2 கிலோ மெத்தம்பேட்டமைன், இரண்டரை கிலோ ஆம்பிடாமைன் போதை பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
வளையல் பெட்டி
இந்த போதைப் பொருட்களை வளையல் பெட்டிக்குள் மறைத்து கொரியர் மூலமாக அனுப்ப திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அசாருதீன் தங்கியிருந்த லாட்ஜியில் கடத்துவதற்காக தயராக வைக்கப்பட்டிருந்த வளையல் பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடையது என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் பறிமுதல்
மேலும், போதை பொருள் விற்பனைக்காக வைத்திருந்த இருசக்கர வாகனம், 8 தொலைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசியை ஆய்வு செய்ததில் வெளிநாட்டினர் தொடர்பு இருந்தது அதிர்ச்சி அளித்தது. அவற்றை சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் வேலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோதமாக போதைப் பொருட்களை வாங்குவதாக விசாரணையில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மேலும் கடத்தலில் தொடர்புள்ள நபர்களை கைது விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களை ஒடுக்கதமிழ்நாடுக் காவல்துறை திவீர நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிட்டத்தக்கது.