ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்திய எண்ணெய்யை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து பயோ டீசல் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
2,466 கோடி லிட்டர்
உலகில் உள்ள மற்ற நாட்டினரை விட இந்தியாவில் மக்கள் பொறித்த உணவுகள், எண்ணெய் உணவுகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2,466 கோடி லிட்டர் சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சமையல் பயன்பாடு
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை பயன்படுத்துவதால் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், செரிமான தன்மை குறைவு, கெட்டக்கொழுப்பு, குடல் பாதிப்புகள் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை பாதுகாப்பு இன்றி அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் . அதனால்தான் கழிவு எண்ணெய்யை மறுசுழற்சி செய்து பயோடீசல் போன்ற மாற்று எரிசக்தி பொருளாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
பயோடீசல் நிறுவனங்கள்
பெட்ரோல், டீசலுக்கு வளைகுடா நாடுகளை நம்பியே இந்தியாவின் நிலை உள்ளது. அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய்யை செலவு செய்து வருகிறது. இந்நிலையில், யுரேனஸ் மற்றும் என்ஓகிரீன் என்ற நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் எடுத்து அசத்தி வருகிறது.
உபயோகித்த சமையல் எண்ணெய்
அதன்படி இந்த நிறுவனங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிறிய உணவகம் தொடங்கி நட்சத்திர ஹோட்டல் வரை சென்று சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை கொள்முதல் செய்து வருகின்றனர். உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை நேரடியாக ஒரு லிட்டர் 30 முதல் 35 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருகிறது.
ஹோட்டல் மட்டுமின்றி, கேன்டீன்கள், நொறுக்குத் தீனி தயாரிக்கும் இடங்களில் இருந்தும் உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது. டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படும் சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்து பயோடீசல் தயாரிப்பதாக அந்நிறுவனத்தின் ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு
சன்பிளவர் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அனைத்தையும் டீசலாக மாற்ற முடியும் என்கின்றனர் அந்நிறுவனத்தினர். ஒரு லிட்டர் எண்ணெயிலிருந்து சுமார் 85 சதவீத பயோ டீசல் தயாரிக்கப்படுவதாகவும். இவை வழக்கமான டீசலை விட ஏழு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை விலை குறைவாக விற்கப்படுவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சமையல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் பயோடீசல் மூலம் இரு சக்கர வாகனத்தை தவிர கார், ஆட்டோ, கனரக வாகனம் என அனைத்து வாகனங்களும் இயங்கும் என தெரிவித்துள்ளனர்.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.