உலகம்

மௌனம் உடைத்த ஜெலன்ஸ்கி…ரஷ்யாவிற்கு பயந்து அடக்கி வாசிக்கும் நேட்டோ அமைப்பு!

ரஷ்யா உக்ரைன் போர் நீண்ட நாளாக நடந்து வரும் நிலையில் நேட்டோ அமைப்பின் மீதான தனது அதிருப்தியை முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

கடந்த பிப்.24 உக்ரைன் மீது வெளிப்படையாக தனது போரை தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் தாக்குதலில் சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. உலக நாடுகள் பல இப்போரை நிறுத்த முயற்சி செய்தபோது எதையும் கண்டுகொள்ளாத ரஷ்யா தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உயிருக்கு பயந்து பொதுமக்கள் தஞ்சமடைந்த தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திலும் குண்டு வீசி பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி அனைவரையும் கொன்று குவிக்கிறது.

போரின் பிரதான காரணம்

நேட்டோ என்று சொல்லப்படும் நார்த் அட்லாண்டிக் ட்ரிட்டி ஆர்கனிசேஷனில் இணைவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆர்வம்காட்டி வந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உக்ரைன் நேட்டோ அமைப்போடு இணைந்தால் அது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என நினைத்த ரஷ்ய அதிபர் புதின் அதை எதிர்த்தார். உக்ரைன் நேட்டோ அமைப்போடு இணையும் முயற்சியில் ஈடுபட்டால் போரை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

வேடிக்கை பார்க்கும் நேட்டோ

ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்தால் நேட்டோ அமைப்பு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா தங்களுக்கு உதவும் என்று நம்பினார் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி. ரஷ்யா வெளிப்படையாக போரைத் தொடக்கி நடத்தியபோதும் அமெரிக்கா நேரடியாக உக்ரைனுக்கு உதவவில்லை. ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கிறோம், உக்ரைனுக்கு ஆயுதம் கொடுத்து உதவுவோம் என்று பேசிக்கொண்டு தள்ளி நின்றே வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா. போர் தொடங்கி வார கணக்காக நடந்துவரும் நிலையிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவாததால் ஜெலன்ஸ்கி அதிர்ப்தி அடைந்துள்ளார்.

மௌனம் உடைத்த ஜெலென்ஸ்கி

இப்போது நேட்டோ அமைப்பு பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் ஜெலென்ஸ்கி. அவர் கூறுகையில் ‘நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்க மறுக்க ரஷ்யா மீது இருக்கும் அச்சமே காரணம். நேட்டோ இப்போதாவது எங்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ரஷ்யாவிற்கு அஞ்சியே உக்ரைனை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இதை அவர்கள் வெளிப்படையாக சொன்னால் மட்டுமே, நேட்டோ அமைப்பில் இல்லாத உறுப்பு நாடுகள் எங்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முடியும். இதை கடைசியில் ஒரு சமரசமாகச் செய்து கொள்ளலாம். போரின் முடிவு இப்படி அமையத்தான் வாய்ப்புகள் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

 

மேலும் ஜெலென்ஸ்கி கூறுகையில் ‘உக்ரைன் சரணடைய வேண்டும் என்ற ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கையை உக்ரைன் ஒரு போதும் ஏற்காது. அவர்கள் உக்ரைன் நாட்டின் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். எங்கள் மக்கள் கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சாத்தியமற்றது. கார்கிவ், மரியுபோல், கீவ் நகர் மீது ரஷ்யா மோசமான தாக்குதலை நடத்தி உள்ளது. அங்குள்ள மக்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நகரங்களை விட்டு வெளியேறி உள்ளனர். இப்படி இருக்கும் போது, ரஷ்யா கூறுவதை எங்களால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார்.

 

Related posts