தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எவ்வித சந்தேகமுமில்லை என தெரிவித்துள்ளார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களைக்கொண்டு அரசால் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இன்று நேரில் ஆஜரானார் ஓ.பன்னீர்செல்வம்.
அப்போது ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால், பொதுமக்களிடத்தில் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து எழுந்திருந்த சந்தேகங்களை போக்கவே தாம் விசாரணை கமிஷன் ஒன்றினை அமைக்க வேண்டுமென கோரியதாகவும் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.
முன்னதாக, நேற்றைய தினம் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜரான பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லலாமென அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.