உடுமலை நகராட்சியில் பள்ளி மாணவர்கள் கொண்டு என் குப்பை, என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணி
திருப்பூர் உடுமலை நகராட்சியில் என் குப்பை, என் பொறுப்பு திட்டம் என்ற மக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி நுண் உரக்குடிலை சென்றடைந்தது. பேரணியை நகராட்சி தலைவர் மு.மத்தீன் தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை விஜயா, நகராட்சி நல அலுவலர் கவுரிசரவணன், சுகாதார ஆய்வாளர்கள் பி.செல்வம், எஸ். ஆறுமுகம், நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அங்கு, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம்பிரிப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது.