அடுத்த தலைமுறைக்கு திமுகவின் இயக்க கொள்கைகளை எடுத்து செல்லும் பணியை உதயநிதி, ஸ்டாலினை மிஞ்சி செயல்படுவார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
2008ம் ஆண்டு திரைத்துறையில் கால்பதித்த உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பல படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வந்தார். 2012ம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாவும் மாறினார். அந்த சமயத்தில் ஒரு பேட்டியில் உதயநிதியிடம் அரசியல் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் அரசியலுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறினார்.
அரசியல் என்ட்ரி
அதன்பிறகு சில அரசியல் நிகழ்ச்சிகளில் தலைக்காட்ட தொடங்கினார். அதனைத்தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் என்று கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். அதன்பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.
உதயநிதி பதில்
இதனிடையே சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற குரல் எழ தொடங்கியிருக்கிறது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய தி.மு.கவை சேர்ந்த பலரும் இந்த கருத்தை முன்வைத்தனர். இது குறித்து நிருபர் ஒருவர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த அவர் தலைவரிடம் சொல்லிவிடுகிறேன் என்று கிண்டலாக கடந்து சென்றார்.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மத்திய மாவட்ட இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், மேலும், கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது போன்றவை ஆலோசிக்கபட்டது.
அமைச்சர் பொன்முடி
அதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அடுத்த தலைமுறைக்கு திமுகவின் இயக்க கொள்கைகளை எடுத்து செல்ல செல்லும் பணியை தற்போது ஸ்டாலின் செய்து வருவதுபோல அடுத்து உதயநிதி ஸ்டாலின் செய்வார். அதிலும் உதயநிதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை மிஞ்சி செயல்படுவார் என்று கூறினார். தற்போது மு.க.ஸ்டாலின் மாவட்டமாக திகழும் விழுப்புரம் மாவட்டம், வருங்காலத்தில் உதயநிதியின் மாவட்டமாக திகழும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மேலும், அந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் அமைச்சராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.