திருப்பத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் திடீர் மரணத்தால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணி பெண் திடீர் மரணம்
வாணியம்பாடி அண்ணாநகர் கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29) மனைவி சங்கரி (21). சங்கரி கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். அடுத்த மாதம் பிரசவிக்கும் தேதியையும் மருத்துவர்கள் குறித்து கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், இன்று காலையில் சங்கரிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், பணியிலிருந்த 4 செவிலியர்கள் சேர்ந்து, சங்கரிக்கு மருத்துவம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சங்கரி இறந்து விட்டார் என கூறப்பட்டது. மருத்துவர்கள் பணியிலில்லாமல் செவிலியர்களால் அளிக்கப்பட்ட அலட்சியமே மரணத்துக்குக் காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்துள்ளனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

