தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் பனைமரம் ஒன்று விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பனைமரம் விழுந்து விபத்து
தூத்துக்குடி, கே.வி.கே.நகரைச் சேர்ந்தவர் இசக்கியப்பன், மனைவி பாலா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இசக்கியப்பனின் வீட்டின் அருகில் உயரமான பனைமரம் ஒன்று உள்ளது. நேற்று இரவில் வீசிய சூறைக்காற்றால் வேகமாக அசைந்தாடிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் காற்றின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியில் முறிந்து வீட்டிற்குள் விழுந்தது.
இதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. அந்த நேரத்தில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவதற்காக வெளியே வந்த குழந்தையின் அத்தை ராஜேஸ்வரியின் வலது கையில் மரம் விழுந்ததால் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எலும்பு நொறுங்கியதாலும், தசைச்சிதைவு ஏற்பட்டதாலும் அவரின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.